Sunday, May 31, 2009

அம்மா அப்பஞ் சுட்ட கதை

பாட்டி வடை சுட்ட கதை கேட்டிருப்பியள். அதென்ன அம்மா அப்பஞ் சுட்ட கதை எண்டு ஏதோ புதுசா கலியாணம் கட்டினவன் பொண்டாட்டியை அவசரப்படுத்தின மாதிரி அவசரப்படுத்தினா நான் சொல்லமாட்டன். கொஞ்சம் பொறுமையா இருக்கோணும்.

அப்பஞ் சுடுறதெண்டா என்ன சின்ன விசயமே. இப்பத்தை மாதிரி அப்ப மாவை ரெடிமேற்றா வாங்கி தண்ணியை விட்டுக் குழைச்சு அரை மணித்தியாலத்திலை அப்பஞ் சுடுற விளையாட்டில்லை பாருங்கோ இது. இப்பிடி அவசரத்திலை சுட்ட அப்பம் அப்பம் மாதிரியே இருக்கிறது. சவத்தை.

வீட்டிலை அபபஞ் சுடுறதெண்டா பெரிய ஆரவாரம் பாருங்கோ. அனேகமாய் மா இடிச்சு வறுக்கிற நாளுக்கு அடுத்தநாள் அப்பமாக தான் இருக்கும். மாவிடிச்ச குறுணியிலை இடிச்ச மாவிலை அப்பஞ்சுட்டா அதன் ரேஸ்டே தனிதான். மாவிடிக்க அரிசியை ஊறப்போட்ட உடனேயே எனக்கு நாக்கில தண்ணி வரத்தொடங்கியிடும். அம்மா நாளைக்கு அப்பமே? எண்டு கேட்டு கேட்டு குடுக்கிற நச்சரிப்பிலை அம்மா சொல்லும், ”மோனை அரியண்டப்படுத்தப்படாது. பேந்து என்னாலை வேலை செய்ய ஏலாது.”


அபபஞ் சுடுறதெண்டா எங்கடை பங்கும் அங்கை இருக்கும். என்ன பங்கு எண்டு கேட்கிறியளோ? அதுதான் இராசேந்திர மாமாவிட்டை போய் அப்பம் புளிக்க வைக்க கள்ளு வாங்கிறது. கள்ளு வாங்க கடைக்கு போகத் தேவையில்லை. எங்கடை சித்தி வீட்டிலேயே இரண்டு தென்னமரம் கள்ளுச் சீவ விட்டிருந்தது. ஒண்டு தெருக்கரை தென்னமரம். மற்றது கிணத்தடியான். இரண்டிலும் கள் இறக்க இராசேந்திரம் மாமா வரும். இராசேந்திரம் மாமாவின்ர உடம்பென்ன உடம்பு. சும்மா உருண்டு திரண்டு. பெசெப்ஸ் ரைசெப்ஸ் பெக் மேஜர் எண்டு உவங்கள் விழந்து விழுந்து பாடமாக்குற தசையெல்லாம் அங்கை உருண்டு திரண்டிருக்கும். உன்னி உன்னி மரம் ஏறேக்கை தசையள் செய்யுற திருவிளையாட்டுகளை கண்டா...எதுக்கு பிறகும் ஏன் ஜிம் அது இது எண்டு அலைவான் பேசாம மரம் ஏற பழகினாலே போதும் எண்டு நீங்கள் நினைப்பியள். ஆனா மரம் ஏறுறதும் சாதாரண வேலையில்லை. யாழ்ப்பாணத்திலை மரம் ஏற விடுறதும் சாதாரண வேலையில்லை.


சரி அது இருக்கட்டும். எவர் சிலவர் பேணியோட நான் கிணத்தடியிலை நிண்டா மாமாவுக்கு தெரியும். பெடியின்ர வீட்டிலை நாளைக்கு அப்பம் எண்டு. முட்டியிலை விழுந்திருந்த வண்டுகளை ஊதித் தள்ளிவிட்டு ஒரு அரைக்கப் கள் கிடைக்கும். கள்ளின்ர நாத்தமும் அதுக்குள்ள விழுந்திருக்கும் வண்டுகளும் எனக்கெண்டா அருவருப்புத்தான். அப்பமே சாப்பிடாம விட்டிருப்பன். அம்மாதான் சொல்லும் அப்பம் சுடேக்கை சூட்டிலை எல்லாக்கிருமியளும் செத்துப்போகும் எண்டு. என்க்கு அப்பம் நல்ல விருப்பம். அதாலை அதுக்க விடுற கள்ளைப் பற்றி நான் கவலைப் படுறதில்லை


.

சிவலிங்கத்தார்ற பெடிதான் பரமு. பரந்தாமன் எண்டு சிவலிங்கத்தார் தன்ர மூத்த பெடிக்கு பெயர் வைச்சிருந்தாலும் பரமு எண்டாத்தான் எங்களுக்குத் தெரியும். பரமு கொஞ்சம் குளப்படிதான. அவன்ர வீட்டிலை அவன்தான் அப்பத்துக்கு கள்ளு வாங்கிறது. அப்பத்துக்கு வாங்கின கள்ளிலை அரைவாசிதான் வீட்டைபோகும். மிச்ச அரைவாசியை பெடி மண்டீடும். சிலவேளை முழுக்க அடிச்சிட்டு வீட்டைபோய் கைதவறி கோப்பை விழுந்ததிலை கள்ளு முழுக்க சிந்திண்டு போச்செண்டும் சொல்லி இருக்கிறான்.



என்னெண்டு பிடிபட்டுதெண்டு தெரியேல்லை. ஒருவேளை இவன் ஒவ்வொருநாளும் அப்பத்துக்கெண்டு வாங்கினதிலை இராசேந்த்திரத்தாருக்கு சந்தேகம் வந்துதோ, அல்லது தாய் நேரை கண்டாவோ, அல்லது அவன்ர வாய் நாற்றம் காட்டிக்கொடுத்துதோ தெரியாது. அவன் பிடிபட்டுப் போனான்.

அவன் பிடிபட்ட நாளிலிருந்து என்னையும் கள்ளுக்கு அனுப்புறதில்லை. அப்பச்சோடா போடுறது அல்லது அம்மாவே கிணத்தடியில் கோப்பையை வைச்சிட்டு குசினியிக்கை இருந்துகொண்டே, இராசேந்ததிரம் உதுக்கை எப்பன் வார்த்துவிடும் எண்ணுவா. எங்கடை அம்மாவும் பரமனின்ர அப்பாவும் ஒண்டா படிப்பிச்சதாலை, பரமன் கள் அடிச்ச விசயம் எங்கடை அம்மாவுக்கும் கசிஞ்சிட்டுது போல. தன்ர பெடிக்கும் ஏன் விசப் பரீட்சை வைப்பான் எண்டுதான் உந்த ஏற்பாடு.

பிறகு நான் மேலை படிக்க கொழும்பு வந்திட்டன்.

பரமன் யாழ்ப்பாண யூனிவெஸ்டியிலைதான் படிச்சவன்.

அங்கை படிக்கேக்கையும் கம்பசுக்கு பின்னால இருக்கிற கடையிலை போத்திலிலை கள்ளு வாங்கினதாய்க் கேள்வி.

வீட்டிலை அப்பத்துக்கெண்டா எப்பன் கள்ளுக் காணும்
.இவன் போத்தில் நிறைய வாங்கிறவனாம்.
பெடியள் எல்லாருமாய்ச் சேந்து அண்டாவிலை புளிக்க வைச்சு கனக்க அப்பஞ் சுட்டாங்களோ தெரியாது.

6 comments:

Lavanyan said...

வெளிநாட்டில கள்ளு இல்லாததகல நாங்கள் இங்க அப்பம் சுடுடதில்ல...
பரமுட்ட கள்ளில பங்கு கேட்டதால அவன் காட்டிக் கொடுத்தாவல்லோ கதை கசிஞ்கது???

Appuveli Theeban said...

சரி குரு....உந்த அப்பப் படங்கள் எல்லாம், வீட்டில சுட்டதோ? நெற்ரில சுட்டதோ?

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

நிசாந்
இந்த பரமு யாரெண்டு தெரியுந்தானே.எங்களோட 12 டி யில படிச்சவன். பெயர் கொஞ்சம் மாத்தியிருக்கிறன்

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

படங்கள் நெற்றிலை சுட்டவை

கிடுகுவேலி said...

கள்ளு விட்டு புளிச்ச பிறகு பாலை விட்டு சுட்ட அப்பம்.....! அற்புதம். அந்த சுகம் தேடுது நாக்கு. எங்கு கிடைக்குமோ இனி. தாய்மண் நினைவுகள் தறிகெட்டு போகாமல் இழுத்து பிடித்து வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடரட்டும்.

பாவம் பரமு......!

ராஜா மகள் said...

அப்பக் கதை சூப்பர் குரு...