Thursday, May 7, 2009

சித்திரா பறுவம்

சித்திரா பறுவம் அம்மா இல்லாதாக்கள் விரதம் பிடிக்கிற நாள். தாயோடு அறுசுவைபோம் எண்டு பாடிவைச்ச உண்மைகளை அம்மாவை இழந்துதான் அறியோணும் எண்டில்லை. அம்மாவை பிரிந்து கொழும்பு வந்த 2000 ஆம் ஆண்டே அது விளங்கியிட்டுது.


வேலைக்கு போற பொம்பிளை எண்டாலும் அம்மா ஒருநாளும் கடைச் சாப்பாடு எடுக்க விட்டதில்லை. சிலவேளை தப்பித் தவறி காலமை பாண் வாங்கினாகூட அதுக்கும் கறி சம்பல் எல்லாம் செய்து வைக்கும்.

காலை 3.30 மணிக்கே குசினிக்குள்ள சத்தம் கேட்க தொடங்கிவிடும். முதல்நாள் காய் பிஞசு செட்டி பிரிட்ஜ்க்கை வைக்கும் இநத காலப் பொம்புளையள் மாதிரி இல்லை அம்மா. காலமை எழும்பித்தான் எல்லாம் பிரஸாக செய்யவேணும் எண்டு நிற்கு்ம். எண்டாலும் சமைச்சு முடிச்சு சாப்பாடு தந்துவிட்டு பள்ளிக் கூடம்போய் படிப்பிச்சிட்டு வாறதெண்டா.... செய்து பார்த்தாதான் தெரியும்.

பள்ளிக்கூடம் விட்டு வந்தாலும் டப்பெண்டு அப்பளம் அல்லது வெங்காயம் பொரித்து தாறதுக்கு ஆளைச் சொல்லித்தான். காலமை சமைச்சது குளிர்ந்து போயிருக்கும் எண்ட கவலையாக்கும் மனிசிக்கு.

நல்ல பழக்கமோ கெட்ட பழக்கமோ எனக்குத தெரியாது சாப்பாட்டோடை செம்பும் தண்ணியும் வேணும் எனக்கு.  சாப்பிட்டு சாப்பிட்டு தண்ணி குடிக்கக் கூடாது எண்டு சொன்னாலும் எனக்கு அது பழகிப்போச்சு. சாப்பாடு கறியெல்லாம் வைச்சுப்போட்டு செம்பு வைக்க மற்ந்தா துலைஞ்சுது. சீமந்த புத்திரன் கத்துற கத்திலை உலகமே நடுங்கிப்போய்விடும். கொழும்புக் கடையளிலை சிலவேளை விக்கல் எடுத்தாலே தண்ணி தர மணித்தியால கணக்கு எடுக்கும். பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுப் போற நேரத்திலை சாப்பாடும் தண்ணியும் மேசைக்கு வரப் பிந்தினால் சரி. நீயும் உன்ரை சாப்பாடும். எனக்கு நேரம்போச்சு எண்டு கோவிச்சு கொண்டு போனால் அம்மா கெஞ்சிக்கொண்டு கேற்று வாசல் வரைக்கும் வரும். பேந்து போனால் போகுது எண்டு சுணங்கித் தந்த சாப்பாட்டை மன்னித்து(?!) வாங்கிச் சாப்பிட்டு விட்டு பேந்து பள்ளிக்கூடம் போறது தான். சிலவேளை கோபம் மிஞ்சி சாப்பிடாமலே போய்விட்டா அண்டைக்கு பட்டினி நான் மட்டுமல்ல அம்மாவும் தான். நானாவது பட்டினி கிடக்கிறதாவது ? கன்ரீனிலை வெட்டிப்போட்டுத்தான் போறது. அம்மாதான் பாவம் நான் வந்து வீட்டை 
சாப்பிடும் மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும்.



இடம்பெயர்ந்து 1995 இலை  போகேக்கை அம்மாவுக்கு மாட்டுக்கொட்டில் ஒன்றுதான் சமையலுக்கு கிடைத்தது. அதுவும் நல்லதண்ணி எடுக்க அரை மைல் நடந்து போகவும் வேணும். பாவம் மனிசி!! கல்வீட்டிலையே பிறந்து வளர்ந்து வீட்டுக் கிணத்து தண்ணி பாவிச்ச மனிசிக்கு இப்பிடியெண்டா.

எது எப்பிடியோ எங்களுக்கு சாப்பாடு நேரத்துக்கு கிடைக்கும்.



வருததம் முத்தி கொழும்பு ஆஸ்பத்திரிக்கு ஆளை கொண்டு வந்தபோது காலைமையிலை இருந்து இரவுவரை எல்லாததுக்கும் நான்தான் ஓடித்திரிந்தது ஆளுக்கு தெரியும்.

மோனை சாப்பிட்டியோடா? 

இல்லையெண்டு உண்மை சொன்னால் பேந்து ஆள் சாப்பிடாது. ஓம் எண்டு பொய்தான் சொனனன்.

நாளைக்கு சித்திரா பறுவம் விரதமாம்.

நான் சாப்பிடாம இருந்தது கேள்விப்பட்டா மனிசி துலைச்சிருக்கும். நல்லவேளை ஆள் இப்ப உயிரோட இல்லை.

நாளைக்கு நான் விரதம்.





 

2 comments:

Unknown said...

awesome!its really so touching!ur amma's blessing will be there 4 u always!

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

Thank you Ramanie