Saturday, May 16, 2009

ஒரு அப்பாவியும் பயங்கர வாதியும்.

எங்கை உவன் போட்டான் எண்ட எங்கடை அப்பாவின்ர கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாம ஏதோ காணாமல் போனவர்கள் பற்றி பதில் சொல்லத்தெரியாம நிற்கிற மனித உரிமைகள் ஆணைக்குழு மாதிரி நிற்கிறது வேற யாருமில்லை ஸ்ரீமதி செல்வராணிதான். உது ஸ்ரீமதி செல்வராணிக்கு மட்டுமல்ல ஆம்பிளைப் பிள்ளையளை பெத்து அதுகள் ஏ எல் படிக்கிற வயதில இருந்தா எல்லா வீட்டையும் நடக்கிறதுதான். 

ஓ எல் படிக்கிற வரை பெடியன் தங்கக் கம்பியாக இருந்ததற்கு ஒரு காரணம் அவன் ஒரு ரியூசனுக்கும் போகாததாக கூட இருக்கலாம். அதுமட்டுமில்லாம சேர்ந்த பெடியளும் சும்மா பற்றரி ஈயத்தை உருக்கி சாம்பலிலை கரண்டு எடுக்கும் ஆராய்ச்சியிலிருந்த மோகனன் மற்றது சதுரங்கத்திலை இராணியை வெட்டிப்போட்டு ராசாவை கலைச்சு கலைச்சு துரத்துற பேக் கரன் எண்ட லெவலிலை இருந்ததாலை வீட்டுக்காரருக்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு. பெடியை காணவில்லை எண்டா அது ஒண்டிலை பள்ளிக்கூடத்திலை நிற்கும் அல்லது ஏதாவது ஆராய்ச்சி கோதாவிலை அறிவியல் கழகத்திலை நிற்கும்.

அப்பிடி இருந்த பெடி இப்பிடி மாறும் எண்டு அவையள் கனவிலும் நினைச்சிருக்க மாட்டினம். பெடி ஏ எல் இலை என்ன படிக்குது எந்த ரியுசனுக்கு போகுது எண்டதெல்லாம் இரண்டு மூண்டு மாதம் முடிஞ்ச பின்னர்தான் அதுகளுக்கு தெரியும் எண்டா என்னத்தை சொல்ல?

அதுவும் இப்ப முந்தின மாதிரி இல்லை. முந்தியெண்டா ஊரடங்கு எண்டு றேடியோவிலை சொன்னா பிலத்து சிரிச்சுபோட்டு வழமையான வேலையை பார்க்கிறதுதானே. யார் இருந்தவை ஊரடங்கை அமுல் படுத்த? இரவு பத்துமணிக்கு இணுவிலிலை பத்மலிங்கத்தாரின்ர பாட்டு கச்சேரியை கேட்டுப்போட்டு டைனமோ சைக்கிளிலை ஹம் பண்ணிக் கொண்டுவந்த காலமே இப்ப இருக்குது?? 1996 இலை ஏழு மணிக்குத்தான் கேபியூ எண்டாலும் ஆறுமணிக்கே ஊர் அடங்கியிடும். இதுக்குப்பிறகும் ஆரும் சைக்கிளிலை வாறதெண்டா அது அங்கொடை கேஸாயிருக்கும். அல்லது அது நாங்களாக இருக்கும்.

என்னதான் இருந்தாலும் வீட்டாலை வெளிக்கிடேக்கை எங்க போறன் எண்டு சொல்லிப்போட்டு வெளிக்கிடுறதில்லை. போகேக்கை எங்கை போறாய் எண்டு கேக்கக் கூடாதெண்ட சம்பிரதாயத்தை நாங்கள் நம்பாவிட்டாலும் அம்மா நம்பியதால் எங்கை போறாய் எண்ட கேள்வி எழுப்பப் படுவதும் இல்லை. துலைக்கே போறாயெண்டு ஒருமாதிரி தொண்டையை செருமிக்கொண்டு கேட்டாலும் ஒரு முறைப்புப் பார்வைதான் பதிலாய்க் கிடைக்கும். வீட்டாலை வெளிக்கிட்ட சைக்கிள் இடக்கைப் பக்கமாக போனால் யாழ்ப்பாணம் கோண்டாவில் நல்லூர் எண்டு கிழக்கு பக்கமாக உள்ள ஊர்களையும் வீட்டாலை வலப்பக்கமாக திரும்பினால் வட்டுக்கோட்டை மானிப்பாய் ஆனைக்கோட்டை எண்டு மேற்குப் பக்கமாக ஊர்களையும் நினைத்துக் கொள்ளவேண்டியதுதான். உண்மையை சொன்னால் வெளிக்கிடேக்கை சிலவேளை எங்களுக்கே தெரியாது நாங்கள் எங்கை போப்போறம் எண்டு ! இந்த இலட்சணத்திலை போற இடத்தை வீட்டை எப்பிடி சொல்லிப்போட்டு போறது. ஆக மிஞ்சி ஏதோ சொல்லிப்போட்டு போகோணும் மாதிரி மனசு குறுகுறுத்தால் நான் ஒருக்கா உதிலை போட்டுவாறன் எண்டிட்டு போறது. அந்த ”உதிலை”  எதிலை எண்டு எவருக்கும் தெரியாது.

எப்பவும் வீட்டாலை வெளிக்கிடேக்கை பின்னாலை கரியரிலை ஒரு கொப்பி இருக்கும். அது வீட்டுக் காரரை ஏமாத்த இல்லை. கோகெத யன்னே எண்டு கழுத்தறுக்கும் சந்தியிலை நிக்கிறவங்களை ஏமாத்த. கொப்பியோட வெளிக்கிடுறதாலை வீட்டையும் அதுகள் நினைச்சுக் கொள்ளுறது பெடி ஏதோ கிளாசுக்குதான் போகுதெண்டு. ஆனா ஏழு மணிக்கு ஊரடங்கெண்டா ஏழரைபோலதான் வீட்டை வந்து சேருற பெடி கிளாஸ்தான் போனதெண்டு நம்புறதுக்கு எங்கடை வீட்டுக்காரர் ஒண்டும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. எண்டாலும் கேட்க பயம்.



ஒரு நாலு மணிபோல வெளிக்கிட்டால் பெடி சந்திரன் அண்ணையின்ர படத்துக்குதான் போகும் எண்டு பிரண்ஸ்க்கு தெரியும் ஆனா வீட்டை தெரியாது. பாம்பின் கால் பாம்புதானே அறியும்.

வெளிக்கிட்டாப் பிறகுதான் அப்பா கேட்பார் உவன் எங்கை போறான்?
விடைசொல்ல அம்மா என்ன கடவுளா என்ன! எண்டாலும் என்னத்தை சொல்ல. ஏதோ கிளாஸாம்... நான் சொல்லாத ஒண்டை அம்மா சொல்லிவைக்கும். 

போன பெடி சிலவேளையளிலை வெள்ளனவே வந்திடும். வந்து சைக்கிளை உள்ளு்கை ஏற்றி விட்டுவிட்டு படுத்திட்டுது எண்டா ஆள் திரும்ப வெளியிலை போகாதெண்டு அர்ததம். சைக்கிளை வெளியிலை விட்டு பூட்டிப் போட்டு திறப்பை மேசையிலை வைத்தா பெடி திரும்ப போகப் போகுது ஆனா கொஞ்ச நேரம் கழித்து எண்டு அர்த்தம். சைக்கிளை பூட்டாம உள்ளுக்கை விட்டா விரைவிலை திரும்ப வெளியிலை போகப்போகுது எண்டு அர்த்தம். பூட்டாம சைக்கில் தெவிலை நிண்டா பெடிக்கு கதைக்க பேச நேரமில்லை உடனடியா திரும்ப வெளியே எங்கையோ போகப்போகுது எண்டு அர்த்தம். 

பெடியன் லேட்டா வந்தாலேட்டாகும் ஒவ்வொரு மணித்துளிக்கும் பேச்சு நடக்கும். வேறை யாருக்கு பெடியனின்ர அம்மாவுக்கு தான். ஆனா பெடியன் வீட்ட வந்ததும் பாருங்கோ எல்லாம் கப் சிப். ஒரு கதையில்லை. இந்த வீட்டிலையா இவ்வளவு நேரம் ஏச்சும் பேச்சும் நடந்தது எண்டு பக்கத்து வீட்டுக்காரருக்கே பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

ஒருநாள் இப்பிடித்தான். வெளியிலை போட்டு சைக்கிள் காத்துப்போனதாலை கடையிலை வல்கனைஸ் பண்ண கொடுத்திட்டு இன்னொரு பெடியனிண்டை சைக்கிளிலை ஏறி வீட்டை வெள்ளண வந்திட்டன். நான் வந்ததை ஒருத்தரும் காணேல்லை. வாசலிலை சைக்கிளும் இல்லை. நேரமோ ஆறரையாகுது. அம்மா குசினிக்கை ஏதோ புறுபுறுத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தது.

உந்தக் குறுக்கால போவான் (வேற யார் அது நான்தான்) எங்கை போய்த் துலைஞ்சானோ தெரியாது. எக்கணம் இப்ப தாலியை கட்டுவான் வந்து ( வேறயார் பெடியனின்ர அப்பாதான்) என்னை பேசப் போறான்...தரித்திரம் பிடிப்பான் எங்கை போறதெண்டு சொல்லிப்போட்டுப் போறானே...

வெளியே யாரோ செருமிச் சத்தம் கேட்க புறுபுறுப்பு நின்று வெளியே வந்து பார்த்தது அம்மா.

எட தம்பி எப்படா வந்தனி?

நான் எங்கை போனனான்? இங்கைதானே நிற்கிறன். 

பொறடா மோனை தேத்தண்ணி போட்டனான். ஆறிப் போச்சு . சூடாக்கிக் கொண்டு வாறன்.

அடுப்படியுக்கை பூந்தது அம்மா.

அப்பாவிகள் எப்போதும் பயங்கர வாதிகளை ஆதரிக்கிறார்கள்.







1 comment:

Unknown said...

nice memories...